உலகம்குற்றம்

இஸ்ரேல் நாட்டில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய நபர் சுட்டுக்கொலை

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இதற்கிடையில், இஸ்லாமிய மதத்தினரின் புனித பண்டிகளைகளில் ஒன்றான ரமலான் மாதம் தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதேவேளை, இஸ்ரேலில் கடந்த சில நாட்களாக இஸ்ரேலியர்களை குறிவைத்து கடந்த சில நாட்களாக தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த பயங்கரவாதிகள் இஸ்ரேலில் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் இறுதி முதல் இஸ்ரேல் நகரங்களில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு, கத்திக்குத்து, கார் ஏற்றி தாக்குதல் உள்பட தாக்குதலில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் இஸ்ரேலில் வசித்து வரும் அரேபியர்கள் மற்றும் காசா, மேற்குகரையில் வசித்து வரும் பாலஸ்தீனர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை இந்த தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள் 15 பேர் இஸ்ரேல் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருவதால் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர போலீசார், பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரம் அளித்து இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இஸ்ரேல் போலீசார், பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தி பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களை கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இஸ்ரேலின் அஷ்கிலொன் நகரில் உள்ள கட்டிட வேலை நடைபெறும் பகுதியில் வேலை செய்து வரும் பாலஸ்தீனர்களின் அடையாள அட்டைகளை சோதனை செய்ய அந்த பகுதிக்கு இன்று இஸ்ரேல் போலீஸ் அதிகாரி ஒருவர் சென்றுள்ளார்.

அப்போது, அங்கிருந்த பாலஸ்தீனியர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு இஸ்ரேல் போலீஸ் மீது சரமாரியாக தாக்கினார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீஸ் உடனடியாக தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு தாக்குதல் நடத்திய பாலஸ்தீனியரை சுட்டார். இந்த தாக்குதல் சம்பவத்தில் இஸ்ரேல் போலீஸ் படுகாயமடைந்தார்.

அதேவேளை இஸ்ரேல் போலீஸ் துப்பாக்கியால் சுட்டதில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய பாலஸ்தீனியர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் பொதுமக்கள், போலீசார் மீது தொடர்ந்து தாக்க்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அந்நாட்டில் பரபரப்பான சூழ்நிலையே காணப்படுகிறது.