மிடில் ஓவரில் தடுமாறிய டெல்லி அணி..! லக்னோ அணிக்கு 150 ரன்கள் இலக்கு
நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 15-வது லீக் ஆட்டத்தில் லக்னோ மற்றும் டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராகுல் தலைமையிலான லக்னோ அணி பந்துவீச முடிவு செய்தது .
இதையடுத்து லக்னோ அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா களமிறங்கினர்.
இன்றைய போட்டியில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பிரித்வி ஷா பவர்பிளே ஓவர்களை சிறப்பாக பயன்படுத்தி ரன்களை அள்ளி குவித்தார் .
லக்னோ அணியின் பவுலர்களை பாரபட்சமின்றி துவம்சம் செய்த அவர் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பிரித்வி ஷா 30 பந்துகளில் அரைசதம் கடந்தார் .
ஆனால் கிருஷ்ணப்பா கெளதம் பந்துவீச்சில் 34 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பவல் களமிறங்கி 3 ரன்களிலும் வார்னர் 4 ரன்களிலும் வெளியேற டெல்லி அணி தடுமாற தொடங்கியது.
பின்னர் வந்த அணியின் கேப்டன் பண்ட் உடன் சர்ப்ராஸ் கான் ஜோடி சேர்ந்தார். 50 ரன்கள் பாட்னர்ஷிப்பை கடந்த இந்த ஜோடி டெல்லி அணியை சரிவில் இருந்து மெல்ல மெல்ல மீட்டனர். பண்ட் 39 ரன்களுடனும் சர்ப்ராஸ் கான் 36 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது .
இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றியென்ற இலக்குடன் லக்னோ அணி விளையாடி வருகிறது .
