அரசியல்தமிழ்நாடு

திருவாரூர் அரசு மருத்துவமனையில் பேறுகால அவசர சிகிச்சை மையம்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவரச சிகிச்சை மையத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது சுற்றுப்பயணமாக மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு அரசு மருத்துவமனை வளாகத்தில் 12 கோடி ரூபாயில் கட்டப்பட்ட கட்டடத்தை திறந்து வைத்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டடத்தில் 4 அறுவை சிகிச்சை மையம் மற்றும் 250 படுக்கை வசதிகளுடன் இக்கட்டடம் அமைந்துள்ளது. 200 படுக்கைகள் மகப்பேறு சிகிச்சைக்காகவும் 50 படுக்கைகள், குழந்தைகள் பராமரிப்புக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உளிட்ட பலர் கலந்து கொண்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு வரும் வழியில், பொதுமக்களைச் சந்தித்து அவர்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார். இதேபோல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.