“ரேஷன் கடைகளில் டோக்கனுடன் காத்திருந்தும் ரூ.2000 கிடைக்கல”… பொதுமக்கள் கடும் அதிருப்தி…
இரண்டாயிரம் ரூபாய் நிவாரண நிதி மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பு கிடைக்காததால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கொரோனா நிவாரணத்தின் இரண்டாவது தவணையான 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை, கடந்த 3 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதற்காக வீடுகள் தோறும் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டன. சனிக்கிழமை முதல் 2 ஆயிரம் ரூபாய் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ரேஷன் கடைகளில், டோக்கனுடன் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனாலும் பணம் கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்களில் பலர் அதிருப்தி தெரிவித்தனர். சென்னை, செங்கல்பட்டு, கோவை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் 2 ஆயிரம் நிவாரண தொகையும், 14 வகையான மளிகைட்ப பொருட்களும் வழங்கப்படவில்லை.
தமிழகத்தின் சில பகுதிகளில் பிரதமரின் அரிசி திட்டம் மூலம் கொரோனா கால நிவாரணம் வழங்கும் பணி தொடங்கியது. குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. பிரதமரின் அரிசி திட்டத்தின் மூலம் ஏராளமானோர் பயன் அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
