நுழைவுத் தேர்வை ரத்து செய்யுங்கள்… பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்…
12 ஆம் வகுப்பு மதிப்பெண்ணின் அடிப்படையில் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளின் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை நடத்தினால் பாதிக்கப்படுவார்கள் என்று சி.பி.எஸ்.இ., 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்தது. இதையடுத்து, பாஜக ஆளும் மாநிலங்களும் 12 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக ஆசிரியர்கள், மருத்துவ துறையினர், கல்வியாளர்கள் உள்ளிட்டவர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு 12 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்துள்ள நிலையில் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் நடத்துவது ஏற்புடையதாக இருக்காது என்றம், மாநில கல்வி திட்டத்தின் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை என்பதில் தமிழக அரசு உறதியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான அனைத்து நுழைவு தேர்வுகளையும், ரத்து செய்ததற்கான அதே காரணங்கள் இதற்கும் பொருந்தும். நாங்கள் எப்போதும் வலியுறுத்தி வருவதுபோல் 12 ஆம் வபகுப்பு மதிப்பெண்கள் ஒன்றின் அடிப்படையில் மட்டும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளக்கும் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
