அரசியல்தமிழ்நாடு

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – விசிக தலைவர் திருமாவளவன்

புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் ஆதி திராவிடர் குடியிருக்கும் பகுதியில் உள்ள நீர் தொட்டியில் மனித கழிவை கலந்திருக்கும் கொடூர சம்பவத்தை எதிர்த்து நாளை புதுக்கோட்டையில் தனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ கட்டிடத்தில் அகில இந்திய எஸ்சி எஸ்டி பணியாளர்கள் நல சங்கம் சார்பாக வழங்கப்படும் 2022-23 ஆம் ஆண்டுக்கான நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு எஸ்சி, எஸ்டி மக்களுக்கு சுய தொழில் புரிவதற்கான உபகரணங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “பிரதமர் மோடி அவர்களின் தாயார் நூறு வயது வரை வாழ்ந்து காலம் ஆகி இருக்கிறார். அவருடைய மறைவு மிகுந்த துயரம் அளிக்கிறது. பிரதமர் அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கல். புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் ஆதி திராவிடர் குடியிருக்கும் பகுதியில் உள்ள நீர் தொட்டியில் மனித கழிவை கலந்து இருக்கிறார்கள். இது காட்டுமிராண்டித்தனமான செயல். இழிவான இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். நீண்ட காலமாக அந்த பகுதியில் தலித் மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை துணிச்சலானது, பாராட்டு கூறியது. இந்த சம்பவம் குறித்து நாளை எனது தலைமையில் புதுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை தண்ணீர் தொட்டியில் கழிவு கலந்திருப்பது தொடர்பாக அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். இது போன்ற செயல்களை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளும் அரசு மேற்கொண்டு வருகிறது . அந்த சுதந்திரம் இருப்பதால்தான் துணிச்சலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்கு நாட்களாக இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசு அவர்களின் கோரிக்கையை கனிவோடு பரிசளிக்க வேண்டும். பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாணவிகளுக்கு வழங்கப்படுகிற ஆயிரம் ரூபாய் சிலருக்கு கிடைப்பதில்லை. அதேபோல் ஏழு சதவீதம் மருத்துவ கல்வி சேர்க்க இட ஒதுக்கீடு சலுகைகள் மாணவர்களுக்கு முறையாக சென்று சேர வேண்டும்” என்றார்.