புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அசாமில் 85.38%, கேரளாவில் 78.21% வாக்குப்பதிவு நடந்துள்ளது.
புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில தேர்தல் நேற்று நடைபெற்றது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ் – திமுக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 4 பிராந்தியங்களிலும் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 1,099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தல் பணியில் 5,000 அதிகாரிகள், பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். முதல்வர் ரங்கசாமி திலாசுபேட்டை அரசுப் பள்ளியில் வாக்களித்தார்.
இத்தேர்தலில் 89.87 சதவீதம் சாதனை வாக்குப்பதிவு நடந்துள்ளது. தொடர்ந்து பெறப்படும் தபால் வாக்குகள் மூலம் வாக்கு சதவீதம் 1.36 சதவீதம் கூடும் என தலைமைத் தேர்தல் அதிகாரி ஜவஹர் கூறியுள்ளார். புதுச்சேரியில் இதுவரை நடந்த தேர்தல்களில் இதுவே அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும்.
கேரளாவின் மொத்தம் 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 883 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.69 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். 30,471 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 76,203 போலீஸார், மத்திய படைகளை சேர்ந்த 140 அணிகள் மற்றும் தமிழக காவல் துறையை சேர்ந்த 20 அணிகளை சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 1.46 லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியாற்றினர்.கண்ணூர் மாவட்டம் பினராயி நகரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பினராயி விஜயன் வாக்களித்தார். கேரளாவில் ஒட்டுமொத்தமாக 78.21 சதவீத வாக்குகள் பதிவாகின.
அசாமின் 126 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் பாஜக தலைமையிலான வடக்கு-கிழக்கு ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான அசாம் சோன்மிலிட்டோ மோர்ச்சோ கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 722 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.50 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். 31,486 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மாநில போலீஸார், மத்திய பாதுகாப்பு படைகளை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 2 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியாற்றினர்.
முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஹிமந்த பிஸ்வா சர்மா, குவாஹாட்டியின் அசாராவில் குடும்பத்துடன் வாக்களித்தார். திப்ருகார் பகுதியில் பாஜக – அசாம் ஜாதிய பரிஷத் கட்சி தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். பெரும்பாலான பகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. 85.38 சதவீத வாக்குகள் பதிவாகின.
